தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-2 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசிய தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் தலைமை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை இழந்ததுடன், 40 ஆண்டுகளில் முதன்முறையாக அடுத்தடுத்த ஆண்டுகளில் டெஸ்ட் தொடரை ஒயிட் வாஷ் ஆகப் பறிகொடுத்துள்ளது. இதுகுறித்து டி வில்லியர்ஸ் பேசும்போது, “இந்திய அணியின் தோல்வி தர்மசங்கடமானதும், கடினமானதுமாகும்.

தலைமையைப் பொறுத்தவரை கௌதம் கம்பீர் எப்படிப்பட்டவர் என்பதை நான் அறிவேன். அவர் ஒரு உணர்ச்சிவசப்படும் வீரர். இத்தகைய நபர் ஓய்வறையில், அதுவும் பயிற்சியாளராக இருப்பது நல்ல விஷயமல்ல” என்று பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

மேலும், கம்பீர் போன்ற உணர்ச்சிவசப்படும் முன்னாள் வீரர்கள் அணியின் பயிற்சியாளராக இருப்பது, சில வீரர்களுக்கு உத்வேகம் அளித்தாலும், மற்ற சிலருக்கு அது உத்வேகமாக இருக்காது என்றும் டி வில்லியர்ஸ் குறிப்பிட்டுள்ளார். “கம்பீர் குறித்த கேள்வி கடினமானது. திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை யார் அறிவார்கள்? ஒவ்வொரு வீரருக்கும் பயிற்சியாளர் என்பவர் வெவ்வேறு விதமாகவே தெரிவார்” என்று அவர் கூறினார்.

இந்திய அணி வீரர்கள் தோல்வியைத் தவிர்க்கக்கூடப் போராடவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கிரிக்கெட் வாரியம் தற்போது கம்பீரை நீக்க விரும்பவில்லை என்றாலும், மோசமான தோல்வி குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.