திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட சின்னூர் என்ற மலை கிராமத்தை சேர்ந்தவர் நாகம்மாள்(60). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அந்த மலைப்பகுதியில் சாலை வசதி கிடையாது.

இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும், உறவினர்களும் சேர்ந்து நாகம்மாளை டோலி கட்டி தூக்கி கொண்டு சுமார் 7 கிலோமீட்டர் வரை சுமந்து பெரியகுளம் கல்லாற்று பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து நாகம்மாளை பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சின்னூர் மற்றும் பெரியூர் மலை கிராமத்திற்கு பெரிய குளத்தின் வழியாகத்தான் செல்ல முடியும். அந்த மலை கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டால் கூட ஆற்றை கடந்து பெரிய குளத்திற்கு சென்று அங்கிருந்து தான் மருத்துவமனைக்கு செல்ல முடியும்.

அதிலும் மழை நேரங்களில் அந்த பகுதி மக்களுக்கு ஆற்றை கடப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் அங்கு வசிக்கும் மக்களுக்கு உடல்நிலை குறைவு ஏற்படும் போது திடீரென மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் பலர் உயிரிழந்தனர். எனவே சாலை வசதி செய்து தர வேண்டும் என அந்த கிராமப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.