தெலங்கானா மாநிலம் நாராயணபேட்டை மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலிப்பா என்பவர் கூலி தொழிலாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ராதா என்ற பெண்ணை சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். வீட்டில் வேலைக்கு செல்லாமல் குழந்தைகளை பார்த்துக்கொண்ட ராதா, குடும்பச் செலவுகளை கணவரின் மாத வருவாயில் நடத்தி வந்தார்.

அஞ்சலிப்பா அதிக வேலை செய்து குடும்பத்தை நடத்துவதற்காக இரு இடங்களில் வேலை செய்துவிட்டு இரவு 10 மணிக்கு மேல் வீடு திரும்பி வந்துவந்தார். இந்நிலையில், அதே ஊரை சேர்ந்த இளைஞருடன் ராதாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த உறவு காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. அஞ்சலிப்பா இல்லாத நேரத்தில், வீட்டில் ராதா தனிமையில் அந்த இளைஞருடன் உல்லாசமாக இருப்பது வழக்கமாகியுள்ளது.

ஒரு நாளில் வேலை இல்லாத காரணத்தால் வீடு திரும்பிய அஞ்சலிப்பா, தனது மனைவியையும் அந்த இளைஞனையும் சேர்ந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து, மனைவியிடம் “இதை விட்டுவிட்டு வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்” என்று அறிவுரை கூறியுள்ளார். ஆனால் இதை ஏற்காத ராதா, காதலனுடன் வாழ முடிவு செய்து, கணவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியுள்ளார்.

 

அஞ்சலிப்பாவிற்கு மதுப்பழக்கம் இருந்ததைக் கையாளும் வகையில், வேலை முடிந்து வீடு திரும்பிய அவருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த கணவரின் கழுத்தை நெரித்துக்கொன்று, மறுநாள் காலையில் அழுது நாடகம் நடித்துள்ளார். “என்னோட புருஷன் எழுப்பினா எழவில்லை… உடம்பு ஜில்லுனு இருக்கு… பயமா இருக்கு…” என அக்கம் பக்கத்தினரிடம் கூறியதைக் கேட்டு, அவர்கள் ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர்.

ஆனால் அஞ்சலிப்பா இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் கழுத்தில் காயங்கள் இருப்பதைக் கவனித்த மருத்துவ ஊழியர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, சந்தேகத்தின் பேரில் ராதாவை விசாரித்தனர். தொடக்கத்தில் “மது குடித்தபோது மூச்சு திணறி இறந்தார்” என கூறிய ராதா, தொடர்ந்து நடந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் சிக்கிக்கொண்டார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அஞ்சலிப்பா இயற்கையாக மரணிக்கவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என தெரியவந்ததும், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் உண்மையை ஒப்புக்கொண்ட ராதா, தனது கணவரை தான் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, ராதாவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும்  “மனைவியே கணவரை கொன்று நாடகம் நடித்தார்” என்ற செய்தி அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.