திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார் மீது, நகை திருட்டு சந்தேகத்தில் போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், மரணமடைந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது, அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான நிலையில், அந்த மரணம் சாதாரணமாக அல்ல, கொடூரமான தாக்குதலால் ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறிக்கையின் விவரப்படி, அஜித் குமாரின் உடலில் மொத்தம் 50 வெளிப்புற காயங்கள், அதில் சில சிராய்ப்பு காயங்கள், ரத்தக்கட்டு மற்றும் தசை சிதைவு போன்ற கடும் தாக்கங்களாக உள்ளன. வயிற்றுப் பகுதியில் கம்பி போன்ற கூரிய பொருளால் குத்திய அடையாளம், தலையில் பலமுறை தாக்கப்பட்டு மண்டையோட்டுக்குள் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவரது உடலில் சிகரெட் சூடு வைத்ததற்கான தடயங்கள்வும் உள்ளன.

அது மட்டுமின்றி, நாக்கு கடித்த நிலை, கண்களில் வீக்கம், காதுகளில் ரத்தக்கசிவு, ஆறு முக்கிய பகுதிகளில் பெரிய காயங்கள் உள்ளதாகவும், முக்கியமாக அஜித் குமாருக்கு கஞ்சா போடப்பட்டிருக்கும் சந்தேகமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, சம்பவம் காவல்துறை பூர்வமான முறையில்தான் நடந்து இருந்ததா அல்லது கொடூரமான சித்திரவதை மூலம் நடந்ததா என்ற கேள்வியை எழுப்புகிறது.

இந்த வழக்கில், ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், அஜித் மீது தாக்குதல் நடக்கும் காட்சியை கோயில் ஊழியரான சக்தீஸ்வரன் வீடியோ எடுத்து வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது வழக்கின் முக்கிய சாட்சியாக உள்ளதாக நீதித்துறையினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், இந்த வீடியோவை வெளியிட்ட சக்தீஸ்வரனுக்கு மரண மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தின் முழு கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த வழக்கு, காவல் துறையின் விசாரணை முறைகளில் உள்ள பிழைகள், சட்ட மீறல்கள், மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை மீண்டும் ஒரு முறை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. பொதுமக்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த வழக்கில் சிறப்பு விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.