உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் சௌக் பகுதியில், 4 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் உடலில் காயங்கள் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததால், அவனது தந்தை மற்றும் சித்தி மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதாவது லஜ்பத் நகரில் உள்ள வீட்டில் வியாழக்கிழமை அச்சிறுவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டான். சிறுவனின் தோள், மார்பு, தாடை மற்றும் நெற்றிப் பகுதிகளில் பலத்த காயங்கள் இருந்தன. மேலும், முதுகு மற்றும் கால்களில் கொடூரமாகத் தாக்கப்பட்டதற்கான தழும்புகள் காணப்பட்டன.
இதுகுறித்து சிறுவனின் உறவினர்கள் கூறுகையில், “எனது மருமகனை அவனது தந்தையும், சித்தியும் திட்டமிட்டுத் துடிதுடிக்கக் கொன்றுள்ளனர். அவர்கள் அவனைத் தொடர்ந்து அடிப்பதோடு, மின்சார அதிர்ச்சி (Electric Shock) கொடுத்துச் சித்திரவதை செய்துள்ளனர். நாங்கள் நேரில் பார்க்கச் செல்லும் போதெல்லாம் காயங்கள் இருக்கும். இந்த முறை குளியலறையில் வைத்தே அவனை அடித்துக் கொன்றுவிட்டனர்” எனத் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் தாய், அவன் பிறந்த சில மாதங்களிலேயே உயிரிழந்துவிட்டார். அதன்பின் தந்தை மறுமணம் செய்துகொண்டார். சுமார் மூன்று ஆண்டுகள் அச்சிறுவன் தனது தாய்வழி பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தான். ஆனால், தந்தை நீதிமன்றம் மூலம் சட்டப் போராட்டத்தை நடத்தி, சிறுவனைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகே சிறுவனுக்கு இத்தகைய கொடுமைகள் நேர்ந்துள்ளதாகப் பாட்டி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறுவனுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதாகவும், குளியலறையில் தவறி விழுந்து உயிரிழந்ததாகவும் அவனது தந்தை உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், நேரில் சென்று பார்த்தபோது சிறுவனின் உடலில் இருந்த காயங்கள் அவர்கள் கூறிய கதையைப் பொய்யாக்கியுள்ளது. உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
சௌக் காவல் நிலைய ஆய்வாளர் நாகேஷ் உபாத்யாயா இதுகுறித்து கூறுகையில், சிறுவனின் பாட்டி அளித்த புகாரின் அடிப்படையில், தந்தை மற்றும் சித்தி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்தவுடன் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
