
உத்தரப்பிரதேசம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கோல்ஹுவா கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஜோதி சிங் என்பவர், தன்னை திருமணம் செய்ய மறுத்ததால், அவரது காதலனால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்குக் காரணமான சுரேந்திர சிங் படேல் (வயது 25) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. ஜோதி சிங் வீட்டின் மேல்மாடியில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தபோது, காதலன் சுரேந்திரா அவரது வீட்டுக்குள் நுழைந்து, முதலில் கத்தியால் அவரது கழுத்தை அறுத்தார். பின்னர் அவரது இரு கைகளிலும் உள்ள நரம்புகளை வெட்டியதோடு, உடலும் பாதியாக உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கொலையின் பின்னர், குற்றவாளி தப்பி ஓடியிருந்த நிலையில், போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.
சிசிடிவி காட்சிகள், மின்னணு சான்றுகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பகவத்பூர் கட்டாரி கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திர சிங் படேலை கைது செய்தனர். விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், “ஜோதி எனது காதலிதான். நான் அவளை திருமணம் செய்ய வேண்டுமென வற்புறுத்தினேன். ஆனால் பலமுறை அவள் மறுத்ததால் மனமுடைந்து, நான் அவளைக் கொன்றேன்,” என வாக்குமூலம் வழங்கினார்.
செவ்வாய்க்கிழமை காலை, சாட்சியங்களை மீட்டெடுக்க போலீசார் சுரேந்திராவை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தன்னிடம் வைத்திருந்த ஒரு பையில் இருந்து திடீரென ஒரு .315 நாட்டுப் பிஸ்டலை எடுத்து போலீசாரை நோக்கி சுட முயன்றார். தற்காப்புக்காக போலீசார் பதிலடி கொடுத்ததில் சுரேந்திராவின் வலது காலில் குண்டு காயம் பட்டது. உடனடியாக மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் .315 பிஸ்டல், இரண்டு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள், இரண்டு புதிய தோட்டாக்கள், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் குற்றச்செயலின் போது அணிந்திருந்த உடைகள் ஆகியவை போலீசால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கை வெறும் 24 மணி நேரத்தில் தீர்த்ததற்காக காவல் கண்காணிப்பாளர் பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா ₹25,000 ரொக்கப் பரிசை விசாரணைக் குழுவுக்கு அறிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.