
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சொல்வதை தன்னுடைய வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மும்மொழி கொள்கை கொண்டுவரப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் எந்த பள்ளியிலும் படிக்கலாம் அது அவர்களுடைய தனிப்பட்ட உரிமை. அதனைப் போலவே எந்த மொழியையும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மாநில அரசின் மொழிக் கொள்கையையும் கல்விக் கொள்கையையும் கேள்விக்குறியாக்கிவிட்டு வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால், அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி ப்ரோ என்று கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, மார்ச் முதல் வாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பில் தமிழகத்திற்கு அநியாயம் நடப்பதாக 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த கடிதம் எங்களுக்கும் கிடைத்தது. அதற்கு நன்றி சொல்லிக் கொள்கின்றேன். விகிதாச்சார அடிப்படையில் 543 தொகுதிகளில் இருந்து 20% உயர்கிறது என்றால் அதே அடிப்படையில் அனைத்து மாநிலங்களின் தொகுதிகளும் உயரும்.
ஆனால் முதல்வர் ஸ்டாலினுக்கு யார் தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறைகிறது என சொன்னார்கள் என்ற கேள்வி எழுப்புகிறோம். அதனைப் போலவே தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேசும்போது மத்திய அரசு மற்றும் மாநில அரசு என்று இரண்டையும் குற்றம் சாட்டியுள்ளார். உங்களுடைய குழந்தைக்கு மூன்று மொழி, நீங்கள் நடத்தும் விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் மூன்று மொழி. ஆனால் தொண்டர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் இரு மொழி. விஜய் சொல்வதை தான் தன் வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.