
உத்தரபிரதேச மாநிலம் காஜிப்பூரில் உள்ள காசிமாபாத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மீது கடைக்காரர் ஒருவன் கொதிக்கும் சூடான எண்ணெயை வீசி கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 20ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில் பெண்ணின் முகம், கழுத்து, முதுகு உள்ளிட்ட இடங்களில் தீக்காயம் ஏற்பட்டு, தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தகவலின்படி, மனநிலை பாதிக்கப்பட்ட அந்த பெண், அடிக்கடி யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்று திரிந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவ நாளிலும், அவள் வீடு விட்டு வெளியேறி, காசிமாபாத்தில் உள்ள தேநீர் கடையொன்றுக்கு அருகே சென்றபோது, அங்குள்ள கடைக்காரர் டிங்கு குப்தா, தனது சகோதரனுடன் ஏற்பட்ட தகராறை காரணமாகக் கொண்டு அந்த பெண்ணின் மீது கொதிக்கும் எண்ணெயை வீசியுள்ளார். இதில் அந்த பெண் படுகாயமடைந்த நிலையில் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவரது சகோதரர் சஞ்சய் பிந்த், காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, காசிமாபாத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி டிங்கு குப்தாவுக்கு எதிராக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திய இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.