உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் பகுதியில், ஒரு வீட்டில் வயோதிப மாமியார் ஒருவரை அவரது மருமகளும், மருமகளின் தாயாரும் சேர்ந்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன. தாக்கப்பட்டவர் சுதேஷ் தேவி என்பவர். இவர் இதற்கு முன்பு போலீசில் புகார் கொடுத்திருந்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. காரணம், மருமகளின் குடும்பத்தினர் காவல்துறையில் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால்தான் புகாரை ஏற்க மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான சிசிடிவி காட்சிகளில், சுதேஷ் தேவியை இரண்டு பெண்கள் மோசமாக தாக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. இந்த வீடியோ வெளியானதும் சமூக வலைதளங்களில் கண்டனம் கிளம்பியது. இதையடுத்து, காவல்துறை வழக்குப் பதிவு செய்யும் நிலைக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சுதேஷ் தேவியின் மருமகள் மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இந்த சம்பவம் தொடர்பாக பலர் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர் – “சிசிடிவி காட்சி வைரலான பிறகு தான் காவல்துறை நடவடிக்கைக்கு வரவேண்டுமா?” என கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இது காவல்துறையின் நடத்தை மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும் பொதுமக்கள் கோபம் தெரிவித்துள்ளனர். மேலும், வலிமை உள்ளவர்களிடம்  போலீசாரின் நிலைப்பாடு இல்லாமல், ஒவ்வொருவருக்கும் சமமான நீதியை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.