இந்தியத் திருமணங்கள் என்றாலே ஆட்டம், பாட்டம், மற்றும் அறுசுவை உணவு தான் நினைவுக்கு வரும். ஆனால் நெதர்லாந்து நாட்டின் ‘டச்’ (Dutch) திருமணங்கள் இதற்கு அப்படியே நேர்மாறாக இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறார்கள்.
முதலாவதாக, ‘டே கெஸ்ட்ஸ்’ (Day Guests) எனப்படும் மணமக்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே திருமணச் சடங்குகள் முதல் இரவு விருந்து வரை முழு உபசரிப்பு அளிக்கப்படுகிறது.
View this post on Instagram
இரண்டாவதாக, ‘ரிசெப்ஷன் கெஸ்ட்ஸ்’ (Reception Guests) வருவார்கள்; இவர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு, ஒரு துண்டு கேக் மற்றும் பானங்களை மட்டும் அருந்திவிட்டு உடனே கிளம்பிவிட வேண்டும். இவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட மாட்டாது.
மூன்றாவதாக, ‘ஈவினிங் கெஸ்ட்ஸ்’ (Evening Guests) எனப்படும் நண்பர்கள் மற்றும் தூரத்து உறவினர்கள் இரவு பார்ட்டிக்கு மட்டும் அழைக்கப்படுவார்கள். இங்கும் ஆட்டம் பாட்டம் மட்டுமே பிரதானம், சாப்பாடு கிடையாது.
யாருக்கு என்ன உபசரிப்பு என்பது அவர்களின் அழைப்பிதழிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். நெதர்லாந்தில் திருமணச் செலவை மணமக்களே ஏற்பதால், வீண் விரயத்தைத் தவிர்க்க இத்தகைய முறையைக் கடைபிடிக்கின்றனர்.
இந்தியக் கண்ணோட்டத்தில் இது சற்று விசித்திரமாகத் தெரிந்தாலும், டச் கலாச்சாரத்தில் இது மிகவும் சாதாரணமான ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் திருமண முறை குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
