கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யகுமார்(31). இவர் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர். சத்யகுமார் ஐயப்பன் சுவாமி மாலை பின்னும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பிரீத்தா(27). இந்த தம்பதியினருக்கு ஜஸ்வந்த் என்ற மகன் உள்ளார்.

நேற்று முன்தினம் சத்யகுமார் தனது அண்ணனின் மோட்டார் சைக்கிளில் காங்கேயனூர் கிராமம் முருகன் கோவில் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது தரணி என்பவர் ஓட்டி வந்த லோடு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சத்யகுமாருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். விபத்தை ஏற்படுத்திய லோடு ஆட்டோ பால் கொள்முதல் நிலையம் நடத்திவரும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணேசனுக்கு சொந்தமானது.

நேற்று சத்தியகுமார், அவரது தாய் சிவரணி, தந்தை பாலு, மனைவி பிரீத்தா ஆகியோர் கணேசனிடம் உங்களது லோடு ஆட்டோ மோதியதால் தான் எலும்பு முறிவு ஏற்பட்டது. எனவே மருத்துவ செலவுக்கு நீங்கள் தான் பணம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த கணேசன், தரணி ஆகிய இருவரும் சேர்ந்து சத்யகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரை சரமாரியாக தாக்கினார்.

இதனால் காயமடைந்த பாலு, ப்ரீத்தா, சிவராணி ஆகிய மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கணேசன், தரணி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.