
சவுதி அரேபியாவில் உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்துவது தொடர்பாக உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கு இடையே துவங்கிய போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பார்லி, கோதுமை போன்ற உணவு தானியங்களுக்கு இரண்டு நாடுகளும் மையமாக செயல்பட்டு வந்த நிலையில் போர் காரணமாக ஏற்றுமதி தடைப்பட்டு விலை ஏற்றம் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தியதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் பேச்சுவார்த்தையில் ஈடுபட உச்சி மாநாடு ஒன்றை நடத்த உக்ரைன் அரசு முடிவு செய்துள்ளது.
இந்த பேச்சு வார்த்தைக்கு வழிவகை செய்யுமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டார். எனவே இதற்கான ஏற்பாடுகளை சவுதி அரேபியா அரசாங்கம் செய்ய தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் பிரேசில் இந்தியா உட்பட 30 நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஆனால் மாநாட்டில் ரஷ்யா பங்குபெருமா என்பது குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை. மாநாடு நடைபெறும் தேதி பற்றி எந்த விவரங்களும் குறிப்பிடப்படாத நிலையில் இந்த மாநாடு போரை நிறுத்துமா என உலக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.