மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம், நவீன கால யுத்த முறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானின் போர் உத்திகள் உலக வல்லரசுகளுக்குப் புதிய பாடத்தைக் கற்பித்துள்ளன. இந்தச் சூழலில், இந்திய விமானப்படை தனது வான் பாதுகாப்புத் திறனை மேம்படுத்த ரஷ்யாவிடமிருந்து ‘பேன்ட்சீர்-எஸ்1’ (Pantsir-S1) பாதுகாப்பு அமைப்புகளை வாங்க முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் உலகின் அதிநவீன எஃப்-35 போர் விமானங்கள், பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் தாட் (THAAD) பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. இருப்பினும், ஈரானின் மலிவு விலை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளுக்கு முன்னால் இவை திணறி வருகின்றன. சில நாட்களிலேயே ஈரான் சரணடைந்துவிடும் என்று கணிக்கப்பட்ட நிலையில், ஈரானின் தற்காப்பு வியூகம் உலகை வியக்க வைத்துள்ளது.

இந்த யுத்தத்தில் அமெரிக்கா செய்த மிகப்பெரிய தவறு, ஈரானின் மலிவான ட்ரோன்களை வீழ்த்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள அதிநவீன ஏவுகணைகளைப் பயன்படுத்தியதுதான். ஈரானின் ஒரு ட்ரோன் விலை மிகக் குறைவு. ஆனால், அதைத் சுட்டு வீழ்த்த அமெரிக்கா பயன்படுத்தும் ஒரு ஏவுகணையின் விலை பல மடங்கு அதிகம். தொடர்ச்சியாக ட்ரோன்களை ஏவி, அமெரிக்காவின் ஏவுகணை இருப்பைக் குறைக்க ஈரான் திட்டமிட்டது. தற்போது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் தற்காப்பு ஏவுகணைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிற்கு ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் சீனாவிலிருந்து ட்ரோன் அச்சுறுத்தல்கள் உள்ளன. கடந்த ஆண்டு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இத்தகைய அச்சுறுத்தல்களை இந்தியா முறியடித்தது. தற்போது, “ஈ எறும்பைக் கொல்ல ஏவுகணை எதற்கு?” என்ற பழமொழிக்கு ஏற்ப, சிறிய அச்சுறுத்தல்களைச் சமாளிக்க ‘பேன்ட்சீர்-எஸ்1’ ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடமிருந்து அவசரக்கால அடிப்படையில் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி

S-400 மற்றும் பேன்ட்சீர்-எஸ்1: என்ன வித்தியாசம் ன்று பார்ப்போம்.

அம்சம் எஸ்-400 (S-400) பேன்ட்சீர்-எஸ்1 (Pantsir-S1)
பயன்பாடு போர் விமானங்கள், பெரிய ஏவுகணைகளை வீழ்த்த ட்ரோன்கள், சிறிய ரக ஏவுகணைகளை வீழ்த்த
தொலைவு 400 கிலோமீட்டர் வரை 20 கிலோமீட்டர் வரை
செலவு ஒருமுறை ஏவ ₹16 கோடி வரை ஒருமுறை ஏவ ₹90 லட்சம் – ₹1.3 கோடி

இதற்காக சுமார் 6,000 கோடி ரூபாய் செலவில் 13 ‘பேன்ட்சீர்-எஸ்1’ அமைப்புகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அவசரக்கால கொள்முதல் கொள்கையின் கீழ் இவை வாங்கப்படுவதால், இன்னும் சில மாதங்களிலேயே இதன் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட 5 எஸ்-400 அமைப்புகளில் மீதமுள்ள இரண்டையும் விரைவாகப் பெற இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

நவீன போர்க்களத்தில் வெறும் பிரம்மாண்ட ஆயுதங்கள் மட்டும் போதாது, சமயோசிதமான பொருளாதார ரீதியிலான தற்காப்பு வியூகமும் அவசியம் என்பதை இந்தியா உணர்ந்து செயல்படத் தொடங்கியுள்ளது.