ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக திமுக தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கி விட்டது. அந்த வகையில் அமைச்சர் கே.என் நேரு பூத் கமிட்டிகளை அமைப்பது மற்றும் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது போன்ற வேலைகளில் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர் உதயநிதிக்கு முக்கிய வேலை கொடுத்துள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் உதயநிதியின் பிரச்சாரம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது. குறிப்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அடிக்கல் நாட்டப்பட்ட செங்கலை எடுத்து வந்து உதயநிதி பிரச்சாரம் செய்தது பேசும் பொருளாக மாறியது. இதன் காரணமாகத்தான் தற்போது அமைச்சர் உதயநிதியிடம் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வேலைகளில் ஈடுபடுமாறு மேலிடம்  அறிவுறுத்தியுள்ளதாக புது தகவல் வெளிவந்துள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறைகளில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டதால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உதயநிதி ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.