ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு வேட்பு மனுவை திரும்ப பெற வேண்டும் என்றால் பிப்ரவரி 10-ஆம் தேதி கடைசி நாள். அதன் பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீமான் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெண் வேட்பாளர் நியமிக்கப்படுவார் என்று அறிவித்துள்ளார்.

பாமக கட்சி தேர்தலில் நிற்கப்போவது மற்றும் யாருக்கும் ஆதரவு கொடுக்கப் போவது கிடையாது என்று தெரிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம், தேமுதிக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் நியமனம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளராக நிற்க விரும்புவர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் ஜனவரி 23-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

விண்ணப்ப படிவத்தை ரூபாய் 15 ஆயிரம் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். அனைவரும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்த பிறகு கட்சி தலைமை முடிவு செய்து யார் வேட்பாளராக நிற்பார் என்பதை அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இபிஎஸ் தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.வி ராமலிங்கம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ் தென்னரசு ஆகிய இருவர்களில் ஒருவர்தான் வேட்பாளராக நிற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் முன்னாள் அமைச்சர் கேவி ராமலிங்கத்திற்கு தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.