கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. இந்தத் தொகுதியின் வேட்பு மனு ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 7ஆம் தேதி நிறைவு பெற்றது. சுயேச்சை உள்ளிட்ட வேட்பாளர்கள் சேர்த்து மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறு வரும் நிலையில், கருங்கல்பாளையம் பகுதியில் வாக்காளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாக்களிப்பதை தடுப்பதாக குற்றஞ்சாட்டி இஸ்லாமிய வாக்காளர்கள் திடீரென்று போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.