மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் அறிக்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திண்டிவனத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வனத்துறை அமைச்சர் பொன்முடி வந்துள்ளார். பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, “ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி தமிழக அரசின் கடந்த மூன்று ஆண்டுகால சாதனைக்கு கிடைத்த பரிசு. இந்த வெற்றி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மட்டுமே வெற்றி பெறும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது.

சீமான் பாஜக வாக்கை பெறுவதற்காக தான் பெரியாரை அவதூறாக பேசினார். 24 ஆயிரம் வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்துள்ளார். ஈரோடு தொகுதி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வாங்கிய ஓட்டுகளை விட இடைத்தேர்தலில் போட்டியிட்ட சந்திரகுமார் 75 % வாக்குகள் பெற்ற அமோக வெற்றி பெற்றுள்ளார். வரும் சட்டப்பேரவை தேர்தல் மட்டுமல்ல நிரந்தரமாக திமுக வெற்றி பெறும் என்பதற்கு ஈரோடு இடைத்தேர்தல் ஒரு முன்னோட்டம். இந்திய கூட்டணியின் பலவீனத்தால் தான் டெல்லியில் பாஜக வெற்றி பெற்றது”. இவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் எம்.எல்.ஏ மஸ்தான், மாவட்ட செயலாளர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏக்கள் செந்தமிழ் செல்வன், குத்தாலம் கண்ணன், மாசிலாமணி ,சேது நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.