ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கி நடந்து வந்த போர், தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தின் மூலம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இதன் ஒரு பகுதியாக உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாகத் திறக்க இரு நாடுகளும் சம்மதித்தன.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை உடைக்கும் வகையில், அந்த வழியே கடந்து சென்ற சிங்கப்பூர் நாட்டுச் சரக்குக் கப்பல் மீது ஈரான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்தக் கப்பல் தங்களது கடலோரப் பகுதி வழியே செல்லாமல் பாதை மாறிச் சென்றதால் தான் தாக்கினோம் என்று ஈரான் தரப்பில் வினோத விளக்கம் அளிக்கப்பட்டாலும், இந்தச் செயல் இரு நாடுகள் இடையே மீண்டும் பயங்கரமான போர்ப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

​ஈரானின் இந்த அதிரடி ஒப்பந்த மீறலைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் ஈரானின் ஏவுகணை தளங்கள் மற்றும் ஆளில்லா விமான நிலையங்கள் (Drones) போன்ற முக்கிய ராணுவ இலக்குகள் மீது அசுர வேகத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி தரைமட்டமாக்கியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், “போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதற்காகவே ஈரான் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இனிமேலும் அமெரிக்காவால் பொறுமையாக இருக்க முடியாது” என்று கொந்தளித்துள்ளார்.

மேலும், ஈரான் தனது வாலைச் சுருட்டிக் கொள்ளாவிட்டால் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை இன்னும் தீவிரப்படுத்தப்படும் என்றும், அப்படி நடந்தால் உலக வரைபடத்தில் ‘ஈரான்’ என்ற நாடே இனி இருக்காது என்றும் டிரம்ப் விடுத்துள்ள மரண எச்சரிக்கை உலக நாடுகளை நடுங்க வைத்து சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.