ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ஜூலி, தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்த விமர்சனம் மற்றும் தனது திருமணம் தொடர்பான சர்ச்சைகளுக்கு வீடியோ மூலம் காரசாரமான விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் வேலூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ஜல்லிக்கட்டு காளையை ஒரு சிறுவன் வைக்கோல் கொடுத்து அமைதிப்படுத்திய கதையைக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்தை விமர்சித்து ஜூலி வெளியிட்ட வீடியோவில், “இது போன்ற கதைகள் சிறுவர்களைத் தவறான பாதையில் தூண்டும் விதமாக அமையக்கூடும். ஜல்லிக்கட்டு உரிமைக்காக நாங்கள் எவ்வளவு போராடினோம் என்பது எனக்குத் தெரியும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் ஜூலியை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.
ஜூலியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்த சிலர், அவருக்கு இது மூன்றாவது திருமணம் எனக் கருத்து பதிவிட்டிருந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஜூலி தனது கணவர் முகமது இக்ரீமுடன் இணைந்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஜூலி கூறியதாவது, “சமூக வலைதளப் போராளிகளே… உங்கள் கணக்குப்படி பார்த்தால் இவர்தான் எனது மூன்றாவது கணவர். ஆனால் எங்களுக்கு இதுதான் முதல் திருமணம். இதற்கு முன்பு ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலிலும், ‘அம்மன் தாயி’ திரைப்படத்திலும் எனக்குத் திருமணம் நடந்தது. திரைக்கதைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் தவெகவினர் விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. இதைப் போன்றே தேர்தல் நேரத்திலும் எதையாவது உளறிவிடப் போகிறீர்கள். அப்புறம் உங்கள் தலைவருக்கு டெபாசிட் கூட கிடைக்காமல் போய்விடும் என்றார்.
புது செருப்ப வாங்கி பிய பிய அடிச்சிருக்கு ஜூலி 😂😂😂 pic.twitter.com/NhFpBBtAR1
— Kovai Nithya (@KovaiNithya) March 3, 2026
தன்னை மிரட்டுபவர்களுக்குப் பதிலளித்த அவர், “என்னைச் சந்திக்க வேண்டுமென்றால் நான் வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருப்பேன். நீங்கள் பனையூரை விட்டு வரமாட்டீர்கள் என்றால், நானே அங்கு வருகிறேன்” என அதிரடியாகச் சவால் விடுத்துள்ளார்.
மேலும் ஏற்கனவே தனது திருமண நிச்சயதார்த்தத்தின் போது மாப்பிள்ளையின் முகம் சரியாகத் தெரியாததால் பல வதந்திகள் பரவின. தற்போது கணவருடன் நேரடியாகத் தோன்றி அனைத்து வதந்திகளுக்கும் ஜூலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தன்னிடம் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நேரடியாகப் பதிலளிக்கும் ஜூலியின் இந்தத் துணிச்சலான போக்கு இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
