திரையுலகில் பலர் திட்டமிட்டு நடிக்க வந்தவர்கள் என்றால், சிலர் எதிர்பாராத விதமாக நடிப்புத் துறையில் நிலைபெற்றவர்கள். அந்த வகையில், நடிகை ராஷி கண்ணா ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். அவரின் முதற்கனவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்பது தான். ஆனால் திரையுலகம் அவரை திசைமாற்றி இன்று முன்னணி நடிகையாக உயர்த்தியுள்ளது.

1990-ல் டெல்லியில் பிறந்த ராஷி டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பள்ளி, கல்லூரிக் காலத்திலேயே விளம்பரங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதும் வேலை செய்து வந்தார்.

அதற்கிடையில் அவருக்கு மாடலிங் வாய்ப்புகள் வந்ததுடன், திரைப்பட உலகில் ஒரு புதிய திருப்பமாக அமைந்தது. தமிழ் சினிமாவில் 2018ல் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமான ராஷி, பின்னர் ‘அடங்க மறு’, ‘அயோக்யா’, ‘சங்கதமிழன்’, ‘அரண்மனை 4’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தனது நடிப்பில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், இன்று ஒரு படத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் நடிகையாக மாறியுள்ளார். ராஷி கன்னாவின் நிகர மதிப்பு ரூ.66 கோடியாக இருக்கின்றதாகத் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.