விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் லாரி டிரைவரான பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. லாரி டிரைவரான பழனி அடிக்கடி வெளியூரில் தங்கி விடுவார். இந்நிலையில் பழனிக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை அவனியாபுரம் பகுதியில் வீடு எடுத்து குடியேறினார். இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்துவள்ளி பனைக்குடி கிராமத்தில் இருக்கும் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இதனையடுத்து உறவினர்கள் முன்னிலையில் இரண்டு பேரையும் அழைத்து சமாதானப்படுத்தி முத்துவள்ளியை பழனியுடன் அனுப்பி வைத்துள்ளனர். கடந்த மாதம் 30-ஆம் தேதி முத்து வள்ளி தனது வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியதாக தெரிகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது பழனிக்கும் முத்துவள்ளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் பழனி தனது மனைவியை அடித்துக் கொன்று உடலை தூக்கில் தொங்கவிட்டுள்ளார். இதனையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியது தெரியவந்தது. இதனால் பழனியை போலீசார் கைது செய்தனர்.