மத்திய, மாநில அரசுகள் நலத்திட்டங்களின் கீழ் வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று பிறப்பித்துள்ளது.

இதில், இலவச வீட்டு மனை பட்டாவை ஒருபோதும் தனி உரிமையாக சட்டப்படி கோர முடியாது என்றும், இது அரசின் நலத்திட்டத் தீர்மானத்தின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மதுரை திருப்பரங்குன்றம் நிலையூர் பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குமாறு கலெக்டரிடம் மனு அளித்த, ஆனால் நிராகரிக்கப்பட்டதால், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் ஆகியோர், “தகுதியற்ற நபர்களுக்கு பட்டா வழங்க முடியாது. வருமான அளவுகோள் மிக முக்கியமானது. இது வீடு இல்லாத, நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் நலத்திட்டம்” என தீர்ப்பளித்தனர்.

மேலும், தமிழக அரசின் வழிகாட்டலின்படி, ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், நீண்ட காலமாக வசிப்பவர்களுக்கு மட்டும் தகுதியுள்ளவர்களாக இருந்தால் 5 ஆண்டு வசிப்பை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து பட்டா பெறலாம்.

நீர்நிலைகள், கோயில் நிலங்கள், கால்வாய்கள், சாலை ஓரங்கள் போன்ற இடங்களில் ஆக்கிரமித்து வசிக்கிறவர்கள் எந்த காலத்திலும் இலவச பட்டா பெற முடியாது. உரிய வருமானச் சான்று, குடும்ப அட்டை, ஆதார், புகைப்படம், சாதிச் சான்று, குடியிருப்புச் சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கொண்டுத்தான் மனு அளிக்க வேண்டும்.

சென்னை, மதுரை போன்ற நகர பகுதிகளில் அதிகபட்சம் 1.5 செண்ட் நிலம் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதுடன், கிராமப்புறங்களில் 2.5 செண்ட் வரை நிலம் வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பு மூலம், இலவச வீட்டு மனை பட்டா என்பது ஒரு உரிமை அல்ல, அரசின் நலத்திட்ட உதவியாக மட்டுமே வழங்கப்படும் என்பதை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.