இறால் சாப்பிட்டதால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். கேரளாவின் பாலக்காடு ஒட்டப்பாலத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்-நிஷா தம்பதியின் மகள் நிகிதா (20) என்பவர் உயிரிழந்தார். இறால் சாப்பிட்டதால் நிகிதாவுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் தொடுபுழாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மறுநாள் அவர் சுவாசக் கோளாறு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு பதினொரு மணியளவில் அவர் இறந்தார். உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு ஏற்பட்டதே மரணத்துக்குக் காரணம் என தெரியவந்தது. நிகிதா தொடுபுழாவில் உள்ள தனியார் கண் கண்ணாடி கடையில் பார்வை மருத்துவராக பணியாற்றி வந்தார். அதேநேரம், மருத்துவர்களின் அலட்சியமே தங்கள் மகளின் இறப்பு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர். உள் உறுப்புகளின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தொடுபுழா போலீசார் தெரிவித்தனர்.