1939 ஆம் ஆண்டிலிருந்து 1945 ஆம் ஆண்டு வரை நடந்த இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து 2.7 மில்லியன் டன் வெடிகுண்டுகளை ஜெர்மனி கூட்டணி நாடுகள் மீது வீசியது. இதில் அதிக அளவு குண்டுகள் ஜெர்மனி மீது வீசப்பட்டது. இந்த வெடிகுண்டுகளில் பல வெடித்து சேதத்தை ஏற்படுத்தி இருந்தாலும் சிலது வெடிக்காமல் பூமிக்குள் புதைந்தது. போர் சமயத்தில் கட்டிடங்கள் பல தரம் தரைமட்டம் ஆக்கப்பட்டதால் வெடிகுண்டுகள் பூமிக்கு அடியில் வெடிக்காமல் புதையுண்டது. அவ்வப்போது சில இடங்களில் வெடிகுண்டுகளும் அதன் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டஸ்ஸல்டார்ஃப் பகுதியில் ஒரு டன் எடையுள்ள வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அப்புறப்படுத்துவதற்காக வெடிகுண்டு கிடந்த  இடத்தை சுற்றி சுமார் 500 மீட்டருக்கு உள்ள மக்கள் அனைவரையும் அவ்விடத்தை விட்டு வெளியேறும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் கிட்டத்தட்ட 13,000 பேர் தங்கள் செல்ல பிராணிகளுடன் அவ்விடத்தை விட்டு தற்காலிகமாக வெளியேறினார். வெடிகுண்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பொருட்டு அப்பகுதியை இணைக்கும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.