அதிமுக கட்சி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் நடிகை கஸ்தூரி தற்போது அது தொடர்பாக பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, என்னால் அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்ததை ஏற்கவே முடியவில்லை. தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளில் ஒன்றாக இருக்கும் அதிமுக தேர்தலை புறக்கணிப்பது ஏற்புடையது அல்ல. பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில் தற்போது தமிழகத்தின் 2-வது பெரிய கட்சியாக இருக்கும் அதிமுக  தேர்தலை நிராகரித்தது மிகவும் தவறு.

திமுக போட்டியிடுகிறது என்றால் கண்டிப்பாக அதை எதிர்த்து அதிமுக போட்டியிட வேண்டும். இரட்டை இலை இல்லாமல் ஒரு தேர்தல் நடைபெறுகிறது என்றால் இதுவே முதல்முறை. ஏற்கனவே நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று பாஜக கூறிவரும் நிலையில் அதற்கு அதிமுக வழிவிட்டது போன்று இது அமைந்துள்ளது. என்னால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. மேலும் அதிமுக எடுத்த முடிவை மீண்டும் மறு பரிசீலனை செய்து தேர்தலில் போட்டியிட வேண்டும். அப்போதுதான் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர்கள் அதிமுகவை உருவாக்கியதற்கும் பெருமை. இதுதான் என்னை போன்ற பலரின் விருப்பமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.