
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆர்பி உதயகுமாருக்கு என்னை பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் பேச தகுதி கிடையாது எனவும் அவர் அதிமுகவில் எந்த நிலையில் இருந்தார் என்பதை சொன்னால் அது அரசியல் நாகரீகமாக இருக்காது எனவும் விமர்சித்திருந்தார். அதோடு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்க காரணமே ஆர்.பி உதயகுமார் தான் என்று கூறியிருந்தார். இதற்கு தற்போது ஆர்.பி உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, ஓ பன்னீர்செல்வத்திற்கு அதிகாரம் வேண்டுமென்றால் அமைதியாக இருப்பார். ஒருவேளை அதிகாரம் மட்டும் கிடைக்கவில்லை எனில் எந்த எல்லைக்கும் செல்வார். மத்திய அமைச்சராக வேண்டுமென்ற ஆசையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் சேர்ந்து பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டார்.
இரட்டை இலை சின்னம் என்பது வாழ்வுக்கு சமம். அதை எதிர்த்து நிற்பது இறப்புக்கு சமம். என்னைப் பற்றி பேசும் தகுதி ஓ பன்னீர்செல்வத்திற்கு கிடையாது. ஜெயலலிதா நற்சான்றிதழ் கொடுத்ததாக தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ஓபிஎஸ். ஆனால் ஓபிஎஸ் மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னிடமே கூறியுள்ளார். அதிமுக ஒற்றுமையாக இருப்பதற்கு யாரும் தடையாக இல்லை என்பதை தொண்டர்கள் நன்றாக அறிவார்கள். ஒற்றுமைக்கு யாரோ தடையாக இருப்பது போன்ற பிம்பத்தை ஓபிஎஸ் உருவாக்குகிறார். ஓபிஎஸ் தனக்கு அதிகாரம் வேண்டும் என்று செயல்பட்டது தான் பிரச்சனைக்கு ஆரம்பம். ஓபிஎஸ் என்னை எச்சரிக்க வேண்டாம். மேலும் இரட்டை இலை சின்னத்தை எதிர்ப்பது என்பது இறப்புக்கு சமம் என்று கூறியுள்ளார்.