ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

35 வயதான ஒரு பெண், தனது காதலனை அழைக்க வற்புறுத்தும் வகையில், நகரின் மரைன் டிரைவ் பகுதியில் அமைந்துள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறியுள்ளார். 100 அடி உயரத்தைக் கடந்ததும், “என் காதலனை அழையுங்கள், இல்லையென்றால் இங்கிருந்து குதித்துவிடுவேன்” எனக் கத்திக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் பதறி போலீசாருக்கு தகவல் வழங்கினர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். “மகளே கீழே வா” என கூறியும், அந்த பெண் தொடர்ந்து  காதலனை அழைக்க வற்புறுத்திக் கொண்டிருந்தார். பாதுகாப்பிற்காக மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டது.

பலமுறை பேசியும் எந்தவித முடிவும் வராத நிலையில், போலீசார் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உதவியை நாடினர். இரண்டரை மணிநேர மேலாக நீண்ட இந்த மீட்பு பணியில், ஒரு கிரேன் மூலம் மீட்புக் குழுவினர் அந்தப் பெண்ணை பாதுகாப்பாக கீழே இறக்கினர்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் விரைவாக பரவி, நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “மரணம் நெருங்கிய நேரத்தில் போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் காட்டிய சிறந்த  பணிகள் பாராட்டத்தக்கது” என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும், “உணர்வுப்பூர்வ நிலைமை காரணமாக பெண்கள் இவ்வாறு மோசமான முடிவுகளை எடுக்க நினைப்பதை தவிர்க்க வழிகாட்டும் அமைப்புகள் தேவை” என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.