
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அஜித்குமார், ஆலங்குடியில் டிஜிட்டல் ப்ளக்ஸ் பேனர் கடை நடத்தி வருகிறார். இவரது தந்தை நாடிமுத்து, அதே பகுதியில் வசிக்கும் பிரபல ரவுடி மணிகண்டன் என்பவரிடம், “இவ்வாறு ரவுடிசம் செய்வது நமது பகுதியை கெடுக்கிறது, இளைஞர்கள் நல்ல பாதையில் செல்ல வேண்டும்” என அறிவுரை கூறியுள்ளார்.
இது மணிகண்டனுக்கு கோபத்தை தூண்டியுள்ளது. இதனால் மணிகண்டன், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, கலைஞர் காலனி பொது விநியோக அங்காடி அருகே நடந்த நாடிமுத்துவை உருட்டுக்கட்டைகள் மற்றும் கல்லால் தாக்கியுள்ளார்.
இதனை அறிந்த குடும்பத்தினர் முத்துவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மணிகண்டன் கும்பல் அங்கும் வந்து மீண்டும் தாக்குதல் நடத்தி, நாடிமுத்துவின் மகன்களான பிரசாந்த் மற்றும் அஜித்குமாரை கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதனால் காயமடைந்த 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார், வழக்குப் பதிவு செய்து மணி மற்றும் அவரது கும்பலைக் கைது செய்ய தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மணி மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.