விராட் கோலி போல நடந்து சென்று  இஷான் கிஷன் டெமோ காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

2023 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவும், இலங்கையும்  கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.2 ஓவரில் 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கையில் அதிகபட்சமாக குஷால் மெண்டிஸ் மட்டுமே 17 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியில் 5 பேர் டக் அவுட் ஆகினர். இது ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கையின் 2வது குறைந்தபட்ச ஸ்கோராகும்.

இந்த போட்டியில் முகமது சிராஜின் 6 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியாவின் 3 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ராவின் 1 விக்கெட்டும் காரணமாக ஒட்டுமொத்த இலங்கை அணியும் சரிந்தது. முகமது சிராஜின் புயல் பந்துவீச்சைக் கண்டு உலகமே திகைத்தது. சிராஜ் 7 ஓவர்களில் 21 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

பின்னர் இலக்கை துரத்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கவில்லை. மாறாக இஷான் கிஷன் – சுப்மன் கில் ஆகியோர் இன்னிங்ஸை தொடங்கினர். இஷான் கிஷன் 18 பந்துகளில் 23 ரன்களுடனும், சுப்மான் கில் 19 பந்துகளில் 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிபெற வைத்தனர். இந்திய அணி 6.1 ஓவரில் 51 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 8வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் ஆனது. ரோஹித் ஷர்மாவின் தலைமையில் இந்திய அணி 2 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் வெற்றிக்கு பின் இந்திய அணி வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர். அப்போது அணி வீரர்கள் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருக்கும்போது,  விராட் கோலியின் நடையை இஷான் கிஷன் மிமிக்ரி செய்கிறார். அதாவது விராட் கோலி எப்படி நடந்து செல்வார் என்பது போல, இஷான் கிஷன் நடந்து சென்றார். பின் அதற்கு விராட் கோலி காலை விரித்து நடந்து எதிர்வினையாற்றினார். இதனால் அங்கிருந்த வீரர்கள் உட்பட ரசிகர்களும் சிரித்தனர். இதனை அங்கிருந்த ரசிகர்கள் வீடியோ எடுத்து பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது.

https://twitter.com/itsDeepakJangid/status/1703441518324031762