கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள் முழுவதுமாக நிரம்பி உள்ளன. இதனால் அந்த அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 1.66 லட்சம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து இன்று நண்பகல் 12 மணிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளது. இதனால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி,நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவும் மற்றும் செல்பி எடுக்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.