திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாகச் சந்தேகப்பட்டு, மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து, அதை வீடியோவாகப் பதிவு செய்து மனைவியின் பெற்றோருக்கு அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கணவன் பிரவீன் என்பவரைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
கொல்லப்பட்ட பாக்யஸ்ரீ (23) என்பவருக்கும் அவரது கணவர் பிரவீனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே குடும்பப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகக் கோபித்துக் கொண்டு சென்ற பாக்யஸ்ரீ, கடந்த இரண்டு மாதங்களாகத் தனது பெற்றோர் வீட்டிலேயே தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், மனைவியைச் சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்துச் செல்வதற்காகப் பிரவீன் அங்குச் சென்றுள்ளார். இனிமேல் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சமாதானமாக வாழலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறித் தனது மனைவியை அழைத்து வந்துள்ளார். ஆனால், கூட்டி வந்த அன்றைய தினமே மாலையிலேயே மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்ததோடு மட்டுமில்லாமல், அதைத் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து, பாக்யஸ்ரீயின் பெற்றோருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி, கொடூர கணவன் பிரவீனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
