தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் தற்போது தன்னுடைய 69-வது படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வரும் அந்த படத்தின் சூட்டிங் இன்னும் 25 நாட்களில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 120 மாவட்ட செயலாளர்களை நியமிப்பதாக விஜய் அறிவித்த நிலையில் 6-கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதோடு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளையும் நிர்வாகிகள் செய்ய வேண்டும் என்று விஜய் கூறியுள்ள நிலையில் அடுத்து வரும் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற்று முதல்வராவோம் என்ற நம்பிக்கையில் அவர் உறுதியாக இருக்கிறார்.

கடந்த தேர்தல்களில் பாஜக மற்றும் திமுகவுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோரை தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளராக விஜய் நியமித்துள்ளார். நடிகர் விஜய் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று வெளிப்படையாக கூறிய நிலையில் தனித்து நின்று தேர்தலை சந்தித்தால் கூட 20 சதவீத வாக்குகளை பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் வீட்டில் இருந்தே அரசியல் செய்வதாக தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவரை விமர்சிக்கிறார்கள்.

Work from home செய்யும் விஜய் எப்போது களத்திற்கு வந்து மக்களை சந்தித்து அரசியல் செய்யப் போகிறார் என்ற கேள்விஅவரை சுற்றி வரும் நிலையில் இன்னும் 25 நாட்களுக்கு பிறகு நடிகர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிடுதல் மற்றும் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் போன்ற பணிகளை விஜய் மேற்கொள்ள இருக்கிறாராம். மேலும் இதன் மூலம் வீட்டில் இருந்து நடிகர் விஜய் அரசியல் செய்கிறார் என்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.