சீனாவின் ஹெனான் மாகாணம் அன்யாங் பகுதியைச் சேர்ந்த பள்ளிச் சிறுவன் ஒருவன், வீட்டுப்பாடம் செய்யும்போது கவனம் சிதறி, அடிக்கடி இருக்கையை விட்டு எழுவது, கால்களை ஆட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான். இதனால் கவலையடைந்த அவனது தாய், அவனது கவனத்தை ஒருமுகப்படுத்த ஒரு விசித்திரமான உத்தியைக் கையாண்டுள்ளார். தனது பாட்டியின் பழைய தையல் இயந்திரத்தை சிறுவனின் படிக்கும் அறைக்குக் கொண்டு வந்து, அவன் எழுதும்போது அதன் பெடலை கால்களால் மிதித்துக்கொண்டே எழுத வைத்துள்ளார். இந்த தையல் இயந்திரத்தில் புதிய மேஜை பலகையை பொருத்தியும், சிறுவன் குனிந்து எழுதாமல் இருக்க பிரத்யேக வசதிகளையும் செய்துள்ளார். இந்த உத்தியின் மூலம் சிறுவனின் கைகளும் கால்களும் ஒரே நேரத்தில் பிஸியாக இருந்ததால், அவனால் எவ்வித கவனச்சிதறலும் இன்றி ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் திறம்படப் படிக்க முடிந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்பொழுது சீன சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
இந்த விசித்திரமான வளர்ப்பு முறை குறித்து இணையதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன. பாரம்பரிய சீன மருத்துவ முறைப்படி, கால்களை மிதிப்பது போன்ற பயிற்சிகள் உடலின் வெப்பத்தைக் குறைத்து மூளையைத் தெளிவாக்க உதவும் என்றும், இந்தத் தொடர் இயக்கம் சிறுவனின் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவியுள்ளது என்றும் ஒரு தரப்பினர் பாராட்டியுள்ளனர். அதேவேளையில், சீனாவில் நிலவும் கடுமையான கல்விப் போட்டி மற்றும் அதிகப்படியான வீட்டுப்பாடச் சுமை காரணமாகவே பெற்றோர் இதுபோன்ற விசித்திரமான முறைகளை (பந்தை மிதிக்க விடுவது, சைக்கிள் பெடல் செய்வது, ஆன்லைனில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து படிக்க வைப்பது) நாட வேண்டியுள்ளது என்றும், இது குழந்தைகளின் ஓய்வு நேரத்தைப் பறித்து அவர்களின் மனநலனைப் பாதிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
