இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு நோயாளிகளுக்கு ரத்த மையங்கள் மூலம் ரத்தம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ரத்த வங்கிகள் மற்றும் சில மருத்துவமனைகளில் ரத்தத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்த நிலையில் இந்த ரத்த வங்கிகள் மூலமாக வழங்கப்படும் ரத்தத்திற்கு எந்தவித கட்டணமும் கிடையாது அதற்கு சேவை கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்படும். இதனை மீறி அவசர தேவைக்கான நேரத்தில் பெறப்படும் ஒரு யூனிட் ரத்தத்திற்கு 3000 முதல் 8000 ரூபாய் வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம் அரிதான ரத்த பிரிவு உள்ள ரத்தத்திற்கு மேலும் கட்டணம் அதிகமாக இருந்து வரும் நிலையில் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி ரத்தம் விற்பனைக்குரியது அல்ல, அதற்கு சேவை கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. ரத்தம் மற்றும் இரத்த கூறுகளுக்கு 250 முதல் 1550 ரூபாய் வரை மட்டுமே சேவை கட்டணம் விதிக்கப்பட வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை அனைத்து மருத்துவமனைகளும் ரத்த வங்கி மையங்களும் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.