பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் வேகமாக பரவி வரும் பிச்சை மோசடி கும்பலை (Beggar Mafia) கட்டுப்படுத்தக் கோரி, லாஹோர் உயர்நீதிமன்றம் (LHC) மாகாண அதிகாரிகளுக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது  “பிச்சை தடுக்கும் சட்டம் இருந்தும் அதனை முறையாக அமல்படுத்தாததால், சட்டத்தின் பலனே இல்லாமல் போயிருக்கிறது” என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அதையடுத்து, பிச்சைக்காரர்களை கண்டறிந்து புகார் செய்யக்கூடிய ஒரு மொபைல் செயலி (Mobile App) உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டது.

அதேபோல், நீதிமன்றம் “பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்தும் பெயரில் பின்னணியில் செயல்படும் பிச்சை கும்பலை நடத்தும் நபர்களிடம் இருந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும்” என்றும் கூறியுள்ளது. மேலும், தெருவில் பிச்சை எடுக்கும் குழந்தைகள் பலர் கட்டாயப்படுத்தப்பட்டவர்கள் என்றும், சிலர் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் எனவும் பத்திரிகையாளர் அபித் கான் தெரிவித்தார். இதனையடுத்து, பிச்சைக்காரர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் மாநில அமைச்சரவை சமீபத்தில் ‘Vagrancy Ordinance 1958’ சட்டத்தில் திருத்தங்களை நிறைவேற்றியுள்ளது. புதிய சட்டப்படி, பிச்சை எடுப்பது இனிமேல் non-bailable offence ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிச்சை கும்பலின் தலைவர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக அதிகபட்சம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மூன்று மாதங்களில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பற்றிய முழுமையான அறிக்கையை அடுத்த விசாரணையில் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.