இந்திய கிரிக்கெட் அணியில் நிலவும் உச்சக்கட்ட போட்டி காரணமாகப் பல நட்சத்திர வீரர்களின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்றி முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவின் ‘ஸ்விங் கிங்’ என்று அழைக்கப்பட்ட 36 வயது புவனேஷ்வர் குமார், கடந்த 2022 ஜனவரிக்கு பிறகு அணியில் சேர்க்கப்படாமல் ஓரம் கட்டப்பட்டுள்ளார்.

அதேபோல், 2023 உலகக்கோப்பையில் இந்தியாவை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி (35), கடந்த 2025 மார்ச் மாதம் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு பிறகு அணியின் எதிர்கால திட்டங்கள் காரணமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளார். புதிய பந்தை ஸ்விங் செய்யும் ஆல்-ரவுண்டர் தீபக் சாஹர் அடிக்கடி ஏற்பட்ட காயங்கள் காரணமாகக் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள் அணியில் இடம்பெறாமல் உள்ளார்.

இவர்களுடன் டெஸ்ட் போட்டிகளில் கலக்கிய 35 வயதான மயங்க் அகர்வாலும் கடந்த 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒருநாள் அணியில் இருந்து முற்றிலுமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளார். டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக வலம் வரும் 35 வயதான சூர்யகுமார் யாதவை பிசிசிஐ (BCCI) டி20 ஸ்பெஷலிஸ்ட்டாக மட்டுமே பார்ப்பதால், 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு அவர் ஒருநாள் அணியில் சேர்க்கப்படவில்லை.

இதேபோல், சிக்ஸ்த் பவுலிங் ஆப்ஷனாகக் கருதப்பட்ட ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடாவும் கடந்த 2022-க்கு பிறகு கடுமையான போட்டி காரணமாகத் ஓரங்கட்டப்பட்டுள்ளார். இதில் மிகவும் கசப்பான விஷயம் என்னவென்றால், தமிழகத்தின் ‘யார்க்கர் கிங்’ என்று போற்றப்படும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜன், காயம் மற்றும் பார்ம் அவுட் காரணமாகக் கடந்த 2021 மார்ச் மாதத்திற்குப் பிறகு தேர்வாளர்களால் முற்றிலுமாக மறக்கடிக்கப்பட்டுள்ளார்.