தமிழகத்தில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என அரசு எச்சரித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை நிறுவனங்களில் மருந்து கட்டுப்பாட்டு துறையின் மூலமாக தொடர் ஆய்வுகள் நடைபெற்ற வருகிறது.

அந்த ஆய்வுகளில் மருந்து மற்றும் அழகு சாதன சட்டத்தின்படி விதிமீறல்களில் ஈடுபட்ட 117 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது எனவும் அவ்வாறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.