அசாம் மாநிலம் கிழக்கு பிலாசிபாரா பகுதியில் நடைபெற்ற பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில், AIUDF கட்சி எம்எல்ஏ ஷம்சுல் ஹுடா ஒப்பந்ததாரரை வாழை மரத்தால் தாக்கிய காட்சி இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 18ஆம் தேதி நடைபெற்ற விழாவில், ஏற்பாடுகள் குறித்து எம்எல்ஏ ஹுடா அதிருப்தியடைந்தார். அவர் எதிர்பார்த்ததைவிட, அழகான, உயரமான வாழை மரங்களில் சிவப்பு ரிப்பன் கட்டப்படவில்லை என்பதுதான் கோபத்திற்கு காரணமாகும். ரிப்பன் வெட்ட எம்எல்ஏ குனிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது, இது அவருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தனது அருகில் நின்ற ஒப்பந்ததாரரின் ஊழியரின் காலரைப் பிடித்து, கைகளால் தாக்கியதோடு, அருகிலிருந்த ஒரு வாழை மரத்தை பிடுங்கி அவரைத் தாக்கும் செயலில் ஈடுபட்டார். நிகழ்வைக் கண்ட அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்த முயன்றும், ஹுடாவின் கோபம் குறையவில்லை. ஏற்பாடுகளில் பிழை ஏற்பட்டதை ஒப்பந்ததாரர் அவினாஷ் அகர்வாலா ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டார். எம்எல்ஏவின் இந்த செயல் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை உருவாக்கியது.

பின்னர் இதுகுறித்து மன்னிப்பு கேட்ட எம்எல்ஏ ஹுடா, “அது நடக்கக்கூடாத ஒரு செயல், ஆனால் எனக்கு அது செய்ய கட்டாயம் ஏற்பட்டது. பொது இடத்தில் நடந்தது தவறு என்பதை உணர்கிறேன். ஆனால் சூழ்நிலை என்னை அவ்வாறு நடக்க செய்தது. எனவே, இந்த செயலில் காயமடைந்தவர் மற்றும் அசாம் மக்களிடமும், பிலாசிபாரா மக்களிடமும் நான் மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.