மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் ஹடோல்டி கிராமத்தை சேர்ந்தவர் அம்பாதாஸ் பவார்(75). முதியவரான இவர் விவசாயம் செய்து வந்தார். நிதி நெருக்கடி காரணமாக அம்பாதாஸ் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து கடந்த 8 வருடங்களுக்கு மேல் தங்களின் தோளில் களப்பையே சுமந்தபடியே வயலில் உழுது வந்தனர்.

சமீபத்தில் இவர்கள் ஏர்‌ உழும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு ஒரு புறம் நெட்டிசன்கள் எதிர்மறை கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். மறுபுறம் வயதான காலத்திலும் தம்பதியினர் இருவரும் சேர்ந்து தன்னம்பிக்கையுடன் வேலை பார்க்கும் மன உறுதியை பாராட்டினர்.

இந்த காலத்தில் விவசாயிகள் பலர் நிதி நெருக்கடி காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் முதியவரான அம்பாதாஸ் இந்த வயதிலும் மனம் தளராமல் உழைக்கிறார். இவர்களின் ஏர் உழும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் நேற்று இந்த தம்பதியினருக்கு லாத்தூர் மாவட்ட கிரந்திக்காரி ஷேத்காரி சங்க தானாவினர் ஒரு ஜோடி காளை மாட்டினை பரிசாக வழங்கினர்.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனமும் இந்த தம்பதியினருக்கு தலா ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கியது. மேலும் மராட்டிய கூட்டுறவு மந்திரி பாபா சாகிப் அம்பாதாசின் விவசாய கடன்களை முழுவதுமாக அடைக்க உதவி செய்வேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.

இதனால் தம்பதியினர் மிகவும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர்களின் ஏர் உழும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் பலரும் தங்களது உதவிக்கரங்களை நீட்டியுள்ளனர்.