இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து சேத்தன் சர்மா விலகியுள்ளார்.

பிசிசிஐ தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் சேத்தன் சர்மா.ஜெய் ஷாவும்  சேத்தன் சர்மாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். இதற்கு பின்னணி என்னவென்றால் தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் நிகழ்ச்சியில் பேசிய சேத்தன் சர்மா இந்திய அணியின் உடைய தேர்வு தொடர்பான பல்வேறு ரகசியங்களை பொதுவெளியில் விட்டிருந்தார். அது மட்டுமில்லாமல் இந்திய வீரர்கள் உடல் தகுதி பெறுவதற்காக ஊக்கமருந்து ஊசி பயன்படுத்துவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

அதாவது கங்குலி, கோலி, ரோஹித் சர்மா ஆகியோரிடையே உள்ள மோதல் குறித்து சேத்தன் சர்மா சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக சேத்தன் சர்மா மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், தற்போது அவரே அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார்..

முன்னதாக 2022 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்தின் காரணமாக தேர்வு குழு கலைக்கப்பட்டபோது சேத்தன் சர்மா தலைவராக நீடித்தார். அவரை தவிர மற்ற தேர்வு குழுவினர் அனைவரும் கலைக்கப்பட்ட நிலையில், அவர் மட்டும் பதவியில் நீடித்து வந்த நிலையில், சர்ச்சை காரணமாக அவரே தற்போது பதவியில் இருந்து விலகி உள்ளார்..