பாகிஸ்தான் ISI அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முகம்மத் அசீம் மாலிக், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (National Security Adviser) கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 2024 முதல் ISI இயக்குநராக பணியாற்றி வரும் அவர், இதற்கு முன்னர் பாகிஸ்தான் ராணுவத்தின் ‘Adjutant General’ பதவியில் இருந்து, சட்டம் மற்றும் ஆட்சிச்சார்ந்த பிரிவுகளை மேற்பார்வையிட்டு வந்தார். இம்ரான் கான் கைது மற்றும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறைகள் உள்ளிட்ட முக்கிய தருணங்களில் அவர் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. பாலுசிஸ்தான் மற்றும் தெற்கு வாசிரிஸ்தான் பகுதிகளில் ஆபத்தான பாதுகாப்பு சூழ்நிலைகளுக்கு நடுவே ராணுவப் பிரிவுகளை கட்டுப்படுத்திய அனுபவமும் அவருக்கு உண்டு.

 

இந்த நியமனம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் உறவில் கடுமையான பதற்றம் நிலவிக்கொண்டிருக்கும் நேரத்தில் நிகழ்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தியா, தாக்குதலுக்குப் பதிலாக பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது வான்வழியை மூடியதுடன், பல பிரபல பாகிஸ்தான் பிரமுகர்களின் சமூக ஊடக கணக்குகளையும் முடக்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஆயுதப்படைகளுக்கு முற்றும் செயல்திறன் சுதந்திரம் அளித்து, பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த பதிலைத் திட்டமிடுமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானிலேயே போர் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய தளபதிகளின் நியமனம் என்பது பேசும் பொருளாக மாறி உள்ளது.