பாபர் அசாம் கேப்டன்சி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கேள்வியெழுப்பியுள்ளார். 

2023 ஆசியக் கோப்பையின் குரூப் சுற்றில் இந்தியாவுக்கு எதிரான மழையால் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமின் கேப்டன் வியூகம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களை தொந்தரவு செய்ததாக அக்தர் கருதினார். இருந்த போதிலும், பாபர் ஸ்பின்னர்களுக்கு அதிக ஓவர்களைக் கொடுத்தார். இந்தியாவுக்கு எதிராக, முகமது நவாஸ், ஷதாப் கான், சல்மான் ஆகா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் 21 ஓவர்களில் விக்கெட் ஏதும் எடுக்காமல் 131 ரன்கள் விட்டுக்கொடுத்தனர். அக்தர், இந்திய மிடில் ஆர்டரை அழுத்தத்தில் வைத்திருப்பதற்கு பாபர் ஒரு முனையிலிருந்து ஒரு வேகப்பந்து வீச்சாளரை வைத்திருந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஒரு ஸ்போர்ட்ஸ் சேனலுடனான உரையாடலில் அக்தர் கூறியதாவது, பாபர் ஸ்பின்னர்களுக்கு இவ்வளவு ஓவர்கள் கொடுத்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஒரு முனையிலிருந்து வேகப்பந்து வீச்சாளரை வைத்திருக்க முடியும் மற்றும் மறுமுனையில் இருந்து ஒரு ஸ்பின்னரை அப்படியே வைத்திருக்க முடியும். இங்குதான் நான் பாபருடன் உடன்படவில்லை. அவர் அதிகமாக சுழற்பந்து வீச்சைப் பயன்படுத்தி விட்டுக்கொடுத்தார்.   குழு சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது, ​​இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்திய இன்னிங்ஸை நடு ஓவரில் நங்கூரமிட்டு 138 ரன் பார்ட்னர்ஷிப்பைப் பகிர்ந்து கொண்டனர். முன்னதாக, இந்தியா ஒரு நேரத்தில் 66/4 என்ற நிலையில் சிக்கலில் இருந்தது.

கிஷன் மற்றும் பாண்டியா இருவரும் சதத்தை தவறவிட்டனர். கிஷன் 82 ரன்களிலும், ஹர்திக் 87 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரின் இன்னிங்ஸால் இந்தியா 266 என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது. இதுமட்டுமின்றி பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோரை அக்தர் பாராட்டினார். அவர் கூறியதாவது- நமது இளம் பந்து வீச்சாளர்கள் மிகவும் திறமையானவர்கள். இப்படிப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்களை பாகிஸ்தானால் மீண்டும் மீண்டும் உருவாக்க முடிந்ததை நினைக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஷாஹீன் தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கிறார் என்று நான் கூறுவேன். தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற அதே எண்ணம் ஹரிஸ் ரவூப்புக்கும் உள்ளது. அவரும் தொடர்ந்து விக்கெட்டுகளை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அதாவது நாளை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் மோதுகின்றன. இந்தப் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான ரிசர்வ் நாளாக செப்டம்பர் 11ம் தேதி வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதி ஆட்டம் மழையால் குறுக்கிட்டால், மறுநாள் அங்கிருந்து ஆட்டம் தொடங்கும். இருப்பினும், மற்ற அணிகளின் போட்டிகளுக்கு ரிசர்வ் டே வைக்கப்படாதது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் இரட்டை நிலை குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வங்கதேசம் மற்றும் இலங்கை பயிற்சியாளர்களும் இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.