2021 டி20 உலகக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் தொடர் தோல்வி அடைந்து, லீக் சுற்றிலேயே வெளியேறியது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அடைந்த தோல்வி, இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தொடரில் இந்திய அணிக்காக 3 போட்டிகளில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி, ஒரு விக்கெட்டையும் வீழ்த்த முடியவில்லை. ஸ்காட்லாந்து போன்ற அணிகளுக்கு எதிராக கூட வெற்றியைப் பெற முடியாத நிலையில், அவருக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இது மட்டுமல்லாமல், ரசிகர்களிடம் இருந்து மிரட்டல் அழைப்புகளும் வந்ததாக அவர் சமீபத்திய யூடியூப் நேர்காணலில் தெரிவித்தார்.

இந்தியா வந்துடாத, வந்தா வெளிய வர முடியாதுனு மிரட்டினாங்க – வருண் சக்கரவர்த்தி

2021 உலகக்கோப்பையில் கடுமையான மன அழுத்தத்திற்குள் சென்றதாக வருண் சக்கரவர்த்தி கூறினார். “அணிக்குள் என்னை நம்பிக்கையுடன் சேர்த்துக்கொண்டாங்க, ஆனால் ஒரு விக்கெட்டும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் இந்திய அணியில் எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. திரும்ப கம்பேக் கொடுக்க மிகவும் கடினமான பயணம் மேற்கொள்ள வேண்டி வந்தது” என்று அவர் கூறினார். உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு இந்தியாவுக்கு திரும்பவேண்டாம், மீறி வந்தால் வெளியே வர முடியாது என மிரட்டல் அழைப்புகள் வந்ததாகவும், விமான நிலையத்திலிருந்து வீடுவரை அவரை சிலர் பின் தொடர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

விமர்சனத்திலிருந்து பாராட்டுகளுக்குத் திரும்பிய பயணம்

2025 சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்கரவர்த்தி 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். “அப்போ விமர்சித்து, மிரட்டிய ரசிகர்களே இப்போது வாழ்த்தி கொண்டிருக்கிறார்கள், அது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார். கடந்த உலகக்கோப்பையின் தோல்வி அவருக்கு கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபடியும் தேசிய அணிக்குள் இடம் பிடிக்க கடுமையாக உழைத்து வந்தேன், அது இனிய வெற்றியாக முடிந்திருக்கிறது என்று வருண் தெரிவித்துள்ளார்.