
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில், மக்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது 10 வயது சிறுமியின் கழுத்தில், இந்தியாவின் மிகவும் விஷமுள்ள வகையான இரண்டு க்ரைட் இன பாம்புகள் சுற்றியிருப்பதை கண்ட பெற்றோர், பெரும் பதட்டத்திலும் தைரியத்துடன் செயல்பட்டு, அந்த சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் தற்போது மாநிலம் முழுவதும் பேசப்படுகிறது.
கயா மாவட்டத்தின் ஃபதேபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ராஜு குமார் கேசரியின் 10 வயது மகள் சலோனியின் கழுத்தில் இரு க்ரைட் பாம்புகள் சுற்றிக்கொண்டதை கண்டு அவரும் அவரது மனைவியும் அதிர்ச்சி அடைந்தனர். மிகவும் விஷமுள்ள வகையாகக் கருதப்படும் க்ரைட் பாம்பு கடித்தால், சில விநாடிகளில் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. ஆனால் தந்தையாகிய ராஜு, தனது உயிரை பணயம்வைத்து தைரியமாக இரு பாம்புகளையும் தனது கைகளால் அழுத்தி கொன்றார்.
சம்பவத்துக்குப் பிறகு, ராஜு தனது மகளுடன் ஃபதேபூர் சுகாதார மையத்திற்கு ஓடினார். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், பாம்பு கடித்தால் ஏற்படும் எந்தவொரு அறிகுறிகளும் அவர்களிடம் காணப்படவில்லை. இருப்பினும், மருத்துவர்கள் பாதுகாப்பு நோக்கத்தில் இருவரையும் கயா மகத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.
தற்போது, சிறுமியும், அவரது தந்தையும் முழுமையாக நலமுடன் உள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. “தந்தையின் தைரியம் மகளின் உயிரை காப்பாற்றியது” என மக்கள் பாராட்டுகின்றனர். மேலும், “இது ஒரு அற்புதம்! இரண்டு விஷப்பாம்புகள் கழுத்தில் இருந்தும் சிறுமி உயிருடன் இருக்கிறாள்” எனப் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் இச்சம்பவம், பெற்றோர் தைரியம் மற்றும் சாதாரண மக்கள் சூழ்நிலையை எதிர்கொள்ளும் மனத்திறனை எடுத்துக்காட்டும் முக்கியமான நிகழ்வாக மாறியுள்ளது.