வேலைவாய்ப்பு தேடிய ஒருவர், நேர்காணலுக்கு பொது போக்குவரத்தை பயன்படுத்தி நடைபயணமாக வந்ததற்காகவே நிராகரிக்கப்பட்டதாக ரெடிட்டில் பகிர்ந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. “Nobody will hire you if you use public transport” என்ற தலைப்பில் வெளியிட்ட அந்த வைரல் பதிவில், நேர்காணல் நடத்திய நிர்வாகி, சிசிடிவி வாயிலாக தன்னை நடந்துவரும் வகையில் பார்த்ததும், உரையாடல் தொடங்குவதற்கு முன்பாகவே கடுமையாக விமர்சனம் செய்ததாக அந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.

அந்த நிர்வாகி, தனது முதல் கேள்வியாகவே “உங்களிடம் நம்பகமான தனிப்பட்ட போக்குவரத்து வசதி உள்ளதா?” என்று கேட்டதாகவும், “பொது போக்குவரத்தை பயன்படுத்துகிறவர்களை நான் ஒருபோதும் நியமிக்க மாட்டேன், சரியான நேரத்திற்கு வர மாட்டீர்கள்” என கடுமையாக விமர்சனம் செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அதோடு,  அந்த ஊழியரின் தலைமுடி சிவப்பாக இருந்த தலைமுடியை ‘தொழில்முறை பார்வைக்கு ஒத்துவராதது’ என விமர்சனம் செய்து, எந்தக் கேள்விகளும் கேட்காமல் “வேறு பல விண்ணப்பதாரர்கள் உள்ளனர், உங்களுக்கு மீண்டும் தொடர்பு வராது” என சொல்லிவிட்டு நேர்காணலை முடிந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக விமர்சனங்களை கிளப்பியுள்ளது. பலர் அந்த நிர்வாகியின் செயல்பாட்டை கடுமையாக கண்டித்து, இது போன்ற மனப்பான்மைகள் வேலைவாய்ப்பு முறைமைகளில் நீக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். பதிவை பகிர்ந்த அந்த நபர், பின்னர் வெளியிட்ட பதிவில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரையோ நிர்வாகியின் பெயரையோ கூறவில்லை.

மேலும்”துறையில் பழிவாங்கும் எண்ணம் ஏற்படக்கூடாது, அது சிறிய தொழில்துறை” என்று தெரிவித்துள்ளார். ஆனால், ரெடிட் சமூகத்திடம் இருந்து கிடைத்த ஆதரவில் அவர் மகிழ்ச்சி அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இது, ஒரு வேலையாளரை மதிப்பீடு செய்யும் போது உடை, தலைமுடி, போக்குவரத்து போன்ற தேவை இல்லாத விஷயங்களை முன்னிலைப்படுத்தக்கூடாது என்பதை நினைவூட்டுகிறது.