ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா (Fujairah) எண்ணெய் ஆலை மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்தத் திடீர் தாக்குதலில் அங்குப் பணியாற்றி வந்த மூன்று இந்தியர்கள் காயமடைந்துள்ள நிலையில், இது இந்தியாவிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்கள் மீதும், முக்கியக் கட்டமைப்பு வசதிகள் மீதும் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று சாடியுள்ளார்.

இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் தோள் கொடுத்து உறுதியாக நிற்கும் என்றும், வளைகுடா பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டப் பேச்சுவார்த்தை ஒன்றே சிறந்த தீர்வு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்கு மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு முக்கிய அரபு நாடு மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

காயமடைந்த இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்ய அமீரக அதிகாரிகளுடன் இந்தியத் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.