மத்தியப் பிரதேச மாநிலம் ரைகான் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாட்னா பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்மாநில பெண் அமைச்சர் பிரதிமா பக்ரி ஆய்வுக்காக சென்றார்.
அப்போது, போடி–மங்காரி பகுதியில் சமீபத்தில் அமைக்கப்பட்டிருந்த சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்ய அவர் முடிவு செய்தார். இதையடுத்து, தனது வாகனத்தில் இருந்து இறங்கிய அமைச்சர், நேரடியாக சாலையோரம் சென்று, காலால் மிதித்து சோதனை செய்தார்.

அப்போது, அவர் மிதித்த இடத்திலேயே சாலை பெயர்ந்து சேதமடைந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர், மீண்டும் மீண்டும் காலால் மிதிக்க, சாலையின் கரையோரப் பகுதி தொடர்ந்து பெயர்ந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் கடும் கோபமடைந்த அமைச்சர், “இதுதானா புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் தரம்?” என அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார். மேலும், சாலை அமைப்பில் குறைபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது மாநிலத்தில் சாலை தரம் மற்றும் கட்டுமானப் பணிகளின் தரம் குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.