
தமிழகத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதில் 6 கோடியே 27 லட்சத்து 30,588 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் 3.7 கோடி ஆண் வாக்காளர்கள், 3.19 கோடி பெண் வாக்காளர்கள், 8,964 மூன்றாம் பாலினத்தவர்கள் இருக்கிறார்கள். இந்த பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் வாக்காளர் பட்டியலில் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் வருகிற 28ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், இந்த காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட பணிகளை மேற்கொள்ளலாம்.
அதன்படி இன்று மற்றும் நாளை தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான மற்றும் நீக்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது. சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் காலை முதல் மாலை வரை இந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும் ஜனவரி மாதத்தில் 18 வயது பிறப்பதாக இருந்தால் தற்போது 17 வயது முடியாதவர்கள் கூட புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.