பாபர் ஆஸம் மீண்டும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார். அவரின் தீவிர ரசிகர்கள் அவரை “Fab Four” பட்டியலில் சேர்க்க வேண்டும் என விரும்பினாலும், அவரது ஆட்டம் அதற்கு உகந்ததாக இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் தரமான ஆட்டத்தை  கொடுக்கவில்லை. “2025 சாம்பியன்ஸ் டிராபி” தொடக்க போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிரான அவரது மெதுவான இன்னிங்ஸ், அவரை விமர்சிப்பவர்களுக்கு இன்னும் சாதகமாக அமைந்தது. 321 ரன்கள் சேர்க்க வேண்டிய பேட்டிங் இன்னிங்ஸில், பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன், 52 டாட் பந்துகள் ஆடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தான் ஒரு அணியின் “சிறந்த பேட்ஸ்மேன்” ஆட்டமா?

பாகிஸ்தான் அணியில் சக்திவாய்ந்த தொடக்க ஆட்டக்காரரான பகார் சமான் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இது பாபருக்குப் பெரிய சந்தர்ப்பமாக அமைந்திருக்க வேண்டும். ஆனால், அவர் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஒரு பவுண்டரி அடித்த பிறகு பாதுகாப்பாக ஆடிக்கொண்டே சென்றார். இதனால், நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் இன்னும் கடுமையான கட்டுப்பாட்டுடன் பந்துவீசி ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் உயர்த்தினர். பாபர் 50 ரன்களை அடைந்தார், ஆனால் அதற்கு 81 பந்துகள் எடுத்தார். இது அவரது ODI வரலாற்றில் ஐந்தாவது மிகவும் மெதுவான அரைசதம் ஆகும். அவருடைய மெதுவான ஆட்டம் காரணமாக, பாகிஸ்தான் போட்டியில் எந்த கட்டத்திலும் வெற்றி பெறும் நிலைக்குச் செல்லவில்லை.

இந்த ஆட்டத்தின் போதே, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மொஹம்மது கைப், பாபரின் ஆட்டத்தை 1980களின் பழைய பாணியில் இருப்பதாக விமர்சித்தார்.அதாவது  “பாபர் இன்னும் 1980களின் ODI கிரிக்கெட் பாணியில் விளையாடுகிறார். பகுதி நேர ஸ்பின்னர்களுக்கு எதிராக வெறும் இரண்டு பவுண்டரிகள் அடித்து, நடுப்பகுதியில் ஒரே முறையில் ரன்கள் சேர்க்க முயல்கிறார். இது தற்போதைய கிரிக்கெட்டில் வேலை செய்யாது” என்று அவர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.

பாகிஸ்தான் இந்த போட்டியை முதல் 10 ஓவர்களிலேயே இழந்துவிட்டது. அதிகளவிலான டாட் பந்துகள் (மொத்தம் 162, அதாவது 27 ஓவர்கள் ரன் எடுக்காமல் போனது) அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால், பாகிஸ்தான் அணிக்கு முந்தைய நாள் ICC ODI தரவரிசையில் முதல் இடத்திலிருந்த பாபர், இந்தியாவின் ஷுப்மன் கில்லிடம் அந்த இடத்தை இழந்தார். தற்போது, இந்த 60 ரன்கள் வித்தியாசமான தோல்வி பாகிஸ்தானை கடுமையான நிலைக்கு தள்ளியுள்ளது. அடுத்த போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான், அதில் வெற்றிபெறாவிட்டால், அரையிறுதிக்கு செல்ல முடியாது. மேலும், பங்களாதேஷ் இந்தியாவை வீழ்த்தினால், பாகிஸ்தானுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கும். ஆனால், இப்போதைய சூழ்நிலையில், அவர்கள் மிகப்பெரிய அழுத்தத்தில் உள்ளனர்.