
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு நேரத்திலிருந்து இன்று அதிகாலை இவரை விடிய விடிய இடி, மின்னல் சூறைக்காற்றுடன் மழை விட்டு விட்டு பெய்தது.
இடி, மின்னல் சூறைக்காற்று காரணமாக சென்னை மாவட்டத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், மதுரை, திருச்சி, கோழிகோடு, கோவை, ஹைதராபாத், கோலாலம்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வந்த 17 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமிட்டபடி பறந்தது.
பின்னர் நிலைமை கொஞ்சம் சரியான உடன் விமானங்கள் தரை இறங்கியது. இதே போல் சென்னையில் இருந்து அபுதாபி, துபாய், கோலாலம்பூர், சிங்கப்பூர், திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட வேண்டிய 18 விமானங்கள் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
சென்னை விமான நிலைய பகுதியில் இடி, மின்னல் சூறைக்காற்றுடன் மழை விட்டு விட்டு பெய்ததால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, அதிக அளவில் இடி மின்னல் சூறைக்காற்று இருந்ததால் பாதுகாப்பு காரணமாக விமானங்கள் தரை இறங்குவதிலும் புறப்பட்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டது. ஆனால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்குவது போன்ற பாதிப்பு எதுவும் சென்னை விமான நிலையத்தில் ஏற்படவில்லை என கூறியுள்ளனர்.